

புதுடெல்லி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். பின்னர் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர் அவரது 3 குழந்தைகளுடனும் நரேந்திர மோடி கொஞ்சி மகிழ்ந்தார்.
8 நாள் பயணத்தில் இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான் அவர் இந்திய பிரதமரால் வரவேற்கப்பட்டு இருக்கிறார்.
கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளித்ததும், மோடி நேரில் சென்று வரவேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு கனடா பிரதமர், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி - ஜஸ்டின் முன்னிலையில் இந்தியா-கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:-
நீண்ட காலமாக உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்,உங்களை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறோம் . நாங்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். பயங்கரவாதம் - தீவிரவாதம் என்பது நம் போன்ற நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகும், இந்த கூறுகளை எதிர்த்துப் போராடுவது முக்கியம். பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவது குறித்து கனடா பிரதமருடன் ஆலோசித்தோம்
இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும்.
உயர் கல்விக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு கனடா ஒரு முக்கிய இடமாக உள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கு உள்ளனர்.
அரசியல் நோக்கங்களுக்கு மதத்தை தவறாகப் பயன்படுத்துவோர் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை.
நமது நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுபவர்களை நாம் சகித்துகொள்ளமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.