சி.பி.எஸ்.இ. தேர்வு எழுத மாணவர்களை கட்டாயப்படுத்துவது பொறுப்பற்ற செயல் - பிரியங்கா காந்தி கண்டனம்

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. தேர்வு எழுத மாணவர்களை கட்டாயப்படுத்துவது பொறுப்பற்ற செயல் - பிரியங்கா காந்தி கண்டனம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் சமீப சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 1.32 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின்படி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரையும், 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஆன்லைன் வாயிலாக சி.பி.எஸ்.இ. தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பான மனுவில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் என்றும், மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க உதவும் வகையில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாகவும் சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத சி.பி.எஸ்.இ. கட்டாயப்படுத்துவது மிகவும் பொறுப்பற்ற செயல். சி.பி.எஸ்.இ. தேர்வு ரத்து செய்யப்படவோ அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்படவோ அல்லது மாணவர்கள் தேர்வு மையங்களில் நேரடியாக எழுதாத முறையிலோ ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com