பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - நாராயணசாமி

பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - நாராயணசாமி
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி கேரளாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் வழியில் புதுச்சேரிக்கு நேற்று அதிகாலை வந்தது. அதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவு ஜோதி புதுச்சேரியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கத்திற்கு ஊர்வலமாக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர்.

இதில் புதுச்சேரி மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கருப்பு துண்டு அணிந்தும், மெழுகு வத்தி ஏந்தியபடியும் கோஷமிட்டு சென்றனர். அதன்பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரசார் அங்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

அதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகள் மேற்கொண்டவர். மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் உள்ளிட்ட மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றியவர். பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வேதனையை அளிக்கிறது. ராஜீவ் காந்தியோடு, காவல் துறையினர், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என 16 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது. பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com