'வாட்ஸ்அப்', 'கூகுள் மீட்' போன்ற இணையதள அழைப்பு செயலிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை

வாட்ஸ்அப், கூகுள் மீட், போன்ற இணையதள அழைப்பு செயலிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக டிராயிடம் மத்திய அரசு கருத்து கேட்டு உள்ளது.
Image courtesy: PTI
Image courtesy: PTI
Published on

புதுடெல்லி,

வாட்ஸ்அப், கூகுள் மீட், சிக்னல் போன்ற இணையதள அழைப்பு மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற வசதிகள் கொண்ட செயலிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக டிராயிடம் மத்திய அரசு கருத்து கேட்டு உள்ளது.

வாட்ஸ்அப், கூகுள் மீட், சிக்னல் போன்ற செயலிகள் செய்திகளை பகிரவும், இணையதள அழைப்பகளை உருவாக்கவும் பயன்படுகின்றன. இவ்வாறு இணையதள அழைப்பு மற்றும் செய்தி பகிரும் வசதிகளை கொண்ட செயலிகளும், ஒரே அளவிலான உரிம கட்டணம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

'ஒரே சேவை, ஒரே விதிகள்' என்ற அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்குனர்களுக்கு அளிக்கப்பட்டிருககும் சட்டப்பூர்வ இடைமறிப்பு மற்றும் சேவையின் தரம் போன்றவற்றின் ஒழுங்குமுறைகளுக்கு இந்த செயலிகளும் இணங்க வழிவகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து சாதாரண தொலைபேசி நெட்வொர்க்குகளில் அழைப்புகள் உள்பட இணைய தொலைபேசியை வழங்க இணையதள சேவை வழங்குனர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) கடந்த 2008-ம் ஆண்டு பரிந்துரைத்தது.

அதேநேரம், அவை ஒன்றுக்கொன்று இணைப்பு கட்டணங்கள் செலுத்த வேண்டும், பாதுகாப்பு ஏஜென்சிகளின் தேவைக்கேற்ப சட்டப்பூர்வமான இடைமறிப்பு கருவிகளை நிறுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது. இந்த பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து வந்தன.

இந்த நிலையில் இணையதள அழைப்பு மற்றும் செய்தி பகிரும் வசதிகள் கொண்ட செயலிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக டிராயின் பரிந்துரையை மத்திய தொலைத்தொடர்புத்துறை நாடியுள்ளது.

அந்த வகையில் டிராய் ஏற்கனவே அளித்திருந்த பரிந்துரையை மறுஆய்வக்காக மத்திய தொலைத்தொடர்புத்துறை தற்போது திருப்பி அனுப்பி உள்ளது.

மேலும் புதிய தொழில்நுட்பங்களின் தோற்றத்திற்கு மத்தியில் தொழில்நுட்ப சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக விரிவான குறிப்புடன் பரிந்துரைகளை வழங்குமாறு டிராயை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com