

சந்திப்பு
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்.இவரை பாட்னாவில் நேற்று லோக்ஜனசக்தி கட்சி தலைவரும், எம்.பி.யுமான சிராக் பஸ்வான் சந்தித்துப் பேசினார்.அவர்களது சந்திப்பால் பீகார் அரசியல் களத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இருவரும், தங்கள் சந்திப்பு குடும்ப உறவுகளின் ரீதியிலானது என தெரிவித்தனர்.
ராம்விலாஸ் பஸ்வான் நினைவுதினம்
மறைந்த லோக்ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 12-ந் தேதியன்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு தேஜஸ்வி யாதவை அழைக்கத்தான் ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான் சந்தித்துள்ளார்.
இதுபற்றி தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
அப்பா (லாலு பிரசாத் யாதவ்) சிறையில் இருந்ததாலும், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாலும், கடந்த ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் மறைந்தபோது அவரது இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இந்த நிலையில் ராம் விலாஸ் பஸ்வானின் முதல் ஆண்டு நினைவு தினம் வருகிறது. டெல்லியில் நாளை (இன்று) அப்பாவை சிராக் சந்திக்கப் போவதாக தெரிவித்தார். அப்பாவின் உடல்நிலை இடம் கொடுத்தால் அவர் பாட்னாவுக்கு வந்து ராம்விலாஸ் பஸ்வான் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெகா கூட்டணியில் சிராக்?
ராம் விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர் பசுபதி குமார் பராஸால், தனது சொந்த கட்சியில் ஓரங்கட்டப்பட்ட சிராக் பஸ்வான், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைவாரா என்று தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று லாலுஜி விருப்பம் வெளியிட்டபோது, என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை என பதில் அளித்தார்.
சிராக் பஸ்வான் கருத்து
தேஜஸ்வி யாதவுடனான சந்திப்பு பற்றி சிராக் பஸ்வான் கூறும்போது, எனக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் இடையேயான சந்திப்புக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். என் தந்தை உயிருடன் இருந்திருந்தால், எனது குடும்பத்தில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் லாலுஜி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்வதை விரும்பி இருப்பார். நானும் அவர் வழியில் செல்கிறேன் என குறிப்பிட்டார்.