ம.பி. முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா செய்த நிலையில், ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரம்

மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.
ம.பி. முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா செய்த நிலையில், ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரம்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் 15 மாதங்களாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு இளம்தலைவராகத் திகழ்ந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சி மேலிடத்துடன் நிலவிவந்த பனிப்போரின் உச்சக்கட்டமாகக் கடந்த 10-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர். சட்டசபையின் மொத்த இடங்கள் 230. ஏற்கனவே 2 காலியிடங்கள் இருந்த நிலையில், மேலும் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் சட்டசபையின் பலம் 206 ஆனது. இதனால் மெஜாரிட்டி பலம் 104 ஆக குறைந்தது.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால், உத்தரவிட்டபடி முதல்-மந்திரி கமல்நாத் கடந்த 16-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை. இதையடுத்து பாரதீய ஜனதா கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார்.

ஆட்சி அமைக்க பாஜக தீவிரம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பெங்களூருவில் முகாமிட்டு இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் டெல்லி செல்கின்றனர். அவர்கள் அனைவரும் பாஜகவில் இணையக்கூடும் என்று தெரிகிறது.

தற்போது 206 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பாரதீய ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்கள் போதும். எனவே பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏதும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com