

டேராடூன்,
உத்தரகாண்டில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
இதேபோன்று, கடந்த 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை (இன்று) ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது. இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் லேண்ஸ்டவுனே பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நடப்பு சூழல் பற்றி பாவ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் முதல்-மந்திரி புஷ்கார் சிங் தமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. உத்தரகாண்டில் பெய்து வரும் தொடர்மழைக்கு 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. அவர்களில் நைனிடால் மாவட்டத்தில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இதுபற்றி டி.ஜி.பி. அசோக் கூறும்போது, ராம்நகர்-ராணிகேத் வழியில் அமைந்துள்ள லெமன் ட்ரீ ரிசார்ட்டில் 200 பேர் சிக்கி உள்ளனர். அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. 5 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, வீடுகளை இழந்தோருக்கு ரூ.1,09,000 வழங்கப்படும் என முதல்-மந்திரி தமி தெரிவித்து உள்ளார்.
உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கார் சிங் தமி மற்றும் டி.ஜி.பி. அசோக் குமார் இருவரும் வான்வழியே ஹெலிகாப்டரில் சென்று கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளத்தில் மிதக்கும் நகரங்களில் வசித்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.