ரபேல் விவகாரம்; காங்கிரஸ் கட்சி அறிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது: ராணுவ மந்திரி

ரபேல் போர் விமான விலை பற்றி காங்கிரஸ் கட்சி அறிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரபேல் விவகாரம்; காங்கிரஸ் கட்சி அறிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது: ராணுவ மந்திரி
Published on

மும்பை,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்துள்ளது. முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்நிலையில் காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் 70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பை பா.ஜனதா நடத்துகிறது. பிரதமர் மோடி மற்றும் அவருடைய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சதி திட்டம் செய்கிறது என்பதை வெளிப்படுத்த இந்த செய்தியாளர் சந்திப்புகள் நடக்கிறது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசும்பொழுது, ரபேல் போர் விமான விலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை மதிக்காமல் காந்தி குடும்பத்தினர் முரட்டுத்தனமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ரபேல் போர் விமான விலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அறிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, மத்திய தணிக்கை குழுவினரிடம் விலை பற்றிய தகவலை நாங்கள் அளித்துள்ளோம். அவர்கள் அவற்றை ஆய்வு செய்வர். அதன்பின்னர் அவர்களின் அறிக்கை நாடாளுமன்ற கணக்கு குழுவிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அறிக்கையை ஆய்வு மேற்கொண்டபின் அது பொது ஆவணம் என்ற நடைமுறைக்கு வரும். இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com