வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் கட்டண பிரச்சினையை காங்கிரஸ் அரசியல் ஆக்குகிறது - பா.ஜனதா குற்றச்சாட்டு

வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் கட்டண பிரச்சினையை காங்கிரஸ் அரசியல் ஆக்குவதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் கட்டண பிரச்சினையை காங்கிரஸ் அரசியல் ஆக்குகிறது - பா.ஜனதா குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைப்பதற்கு அவர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அந்த கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே செலுத்திவிடும் என்று நேற்று அறிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இதேபோல் மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசை குறைகூறி இருந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு பாரதீய ஜனதா மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப் படுத்துவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதால் காங்கிரஸ் ஏமாற்றம் அடைந்து உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்களை ரெயிலில் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பிரச்சினையை அரசியல் ஆக்குகிறது. தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ரெயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வே ஏற்றுக்கொள்கிறது. 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் அந்த தொகையை செலுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு போய்ச் சேருவதில் குழப்பங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக கொரோனா தொற்று வேகமாக பரவி ஏராளமான பேர் பாதிக்கப்பட வேண்டும், உயிர் இழக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இத்தாலியை போல் இந்தியாவிலும் ஏற்பட வேண்டும் என்று சோனியா காந்தி விரும்புகிறாரா?

எனவே இந்த பிரச்சினையை அரசியல் ஆக்குவதை விட்டுவிட்டு, தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சுமுகமாக ரெயில்வே அனுப்பி வைப்பதற்கு ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறியதாவது:-

டிக்கெட் விற்கப்படவில்லை

வெளி மாநிலங்களில் இருந்து ரெயிலில் திரும்பும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்றும், அந்த தொகை அரசே செலுத்திவிடும் என்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார். எந்த ரெயில் நிலையத்திலும் டிக்கெட் விற்கப்படவில்லை. டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வேயும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்பதால், மத்திய பிரதேச பாரதீய ஜனதா அரசும் 15 சதவீத கட்டணத்தை ஏற்றுக் கொள்ளும். இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சில தொழிலாளர்கள் டிக்கெட்டின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது பற்றி சாம்பிட் பத்ராவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மாநில அரசு டிக்கெட்டை வாங்கி அதை தொழிலாளர்களிடம் கொடுத்து இருக்கலாம் என்று பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com