

பெங்களூரு,
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் குதிரை பேரத்தில் விலை போகாமல் இருப்பதற்காக கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்தது எனவும் அக்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டது. இதுபோன்று பா.ஜனதா ஆசைவார்த்தை கூறியது என எம்.எல்.ஏ.க்களும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டினர். எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்த முடியாது என்ற நிலையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து விலகியது.
இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் சித்தராமையா பேசுகையில், பிரதமர் மோடிதான் நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு உள்ளார், என வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது.
இப்போது குதிரை பேரத்திற்கு முயற்சி நடைபெற்றது தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை வாங்க பா.ஜனதா முயற்சி செய்தது தொடர்பாக விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை உடைக்க வெளிப்படையாக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன் என கூறும் பிரதமர் மோடி அதில் தன்னுடைய அர்ப்பணிப்பை உறுதிசெய்ய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறிஉள்ளார்.
2014 பாராளுமன்றத் தேர்தலில் ஹர, ஹர மோடி என கோஷம் எழுப்பட்டது. 2019- பை, பை மோடி என்பதை உறுதிசெய்யும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடியை கொள்ளையடித்துவிட்டது எனவும் குற்றம் சாட்டிஉள்ளார்.