கொரோனா பரவல்: மூத்த அதிகாரிகள், நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை

கொரோனா பரவல் குறித்து மூத்த அதிகாரிகள், நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவல்: மூத்த அதிகாரிகள், நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது.

கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார்.

இந்தநிலையில், பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று மதியம் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நிபுணர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். மந்திரி, அதிகாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 6 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பயணிகள் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதால் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வகுத்தல், கொரோனாவின் புதிய மாறுபாடு குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

"சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com