கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி காரணமாக திருமணத்தை ஒத்திபோட்ட போலீஸ் அதிகாரி, டாக்டர் ஜோடி

கேரளாவில் நடக்க இருந்த திருமணத்தை, கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருப்பதால் போலீஸ் அதிகாரி-டாக்டர் ஜோடி ஒத்தி போட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி காரணமாக திருமணத்தை ஒத்திபோட்ட போலீஸ் அதிகாரி, டாக்டர் ஜோடி
Published on

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள போரில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார் பணி மெச்சத்தகுந்ததாக அமைந்துள்ளது.

அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து முன்வரிசையில் நின்று பணியாற்றி வருகிறார்கள்.

சொந்தக்கடமையா, சமூகக்கடமையா என்று கேள்வி எழுகிறபோது, பலரும் சொந்தக்கடமையை ஒதுக்கி வைத்துவிட்டு சமூகத்துக்கு பணியாற்றுவதில் முழு கவனத்தையும் செலுத்துகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் கனியகுளங்கரா பகுதி போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக இருக்கிற பிரசாத்(வயது 32) என்பவருக்கும், திருவனந்தபுரம் அருகேயுள்ள அரசு சுகாதார மையத்தில் டாக்டராக பணிபுரிகிற பி.ஆர்யாவுக்கும் (25) இந்த மாதம் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் நிச்சயித்திருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உறவினர் களையும், நண்பர்களையும் அழைத்து எளிய முறையில் இந்த திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் இப்போது பிரசாத்தும் சரி, அவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள டாக்டர் மணமகள் ஆர்யாவும் சரி, கொரோனா வைரசுக்கு எதிராக முன்வரிசையில் நின்று தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

இப்போது திருமணம் செய்து கொள்வது தங்கள் பணிக்கு இடையூறாக அமைந்து விடும் என அவர்கள் கருதினர்.

இதையடுத்து அவர்கள் தங்கள் திருமணத்தை ஒத்திபோட முடிவு செய்தனர். ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்தாமல் ஒத்திபோட இரு குடும்பத்தினரும் எளிதாக இணங்கவில்லை.

ஆனால் மணமக்களின் நிர்ப்பந்தம் காரணமாக இப்போது அவர்களது திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது அங்கு அவர்களுக்கு பெருத்த பாராட்டை பெற்றுத்தந்துள்ளது.

இதற்கிடையே மலப்புரம் மாவட்டம், மஞ்சேரியில் தீப்தி என்ற தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ், தனியார் வங்கி ஊழியரான சுதீப் என்பவரை ஒருநாள் மட்டுமே விடுமுறை எடுத்து எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com