கொரோனா வைரஸ் பீதி: டாக்டர்களின் அறிவுரையை பின்பற்றுங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், டாக்டர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுமாறும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பீதி: டாக்டர்களின் அறிவுரையை பின்பற்றுங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

பிரதம மந்திரி பொது சுகாதார திட்ட பயனாளர்கள் மற்றும் மருந்து மைய (ஆஷாதி கேந்திரா) உரிமையாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்று பிரதமருடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பீதி குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பீதியால் ஒட்டுமொத்த உலகமும் இன்று கைகுலுக்குவதற்கு பதிலாக, வணக்கம் (நமஸ்தே) சொல்லும் கலாசாரத்தை கற்று வருகிறது. இது ஒரு மிகவும் சிறிய விஷயம்தான். ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இதுவும் உதவுகிறது.

எனவே மக்கள் அனைவரும் கைகுலுக்குவதை நிறுத்திவிட்டு, வணக்கம் சொல்லுங்கள். கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு இதுபோன்ற அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் டாக்டர்களின் அறிவுரைகளையும் பின்பற்றுங்கள்.

கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என என் சக குடிமக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த வதந்திகளில் இருந்து எப்போதும் விலகியே இருங்கள். ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

பிரதம மந்திரி பொது சுகாதார திட்டத்தில் இதுபோன்ற மருந்து மையங்களில் இருந்து மலிவு விலையில் மருந்துகளை வாங்கி மாதந்தோறும் 1 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுகின்றன. நாடு முழுவதும் 6 ஆயிரத்துக் கும் மேற்பட்ட ஆஷாதி கேந்திரா மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் ரூ.2,500 கோடி வரை சேமிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரகாண்டை சேர்ந்த தீபா ஷா என்ற பெண் கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் கலந்துரை யாடினார். அப்போது அவர் கூறும்போது, நான் கடந்த 2011-ம் ஆண்டு முதல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதற்கான மருந்துகளுக்காக மாதந்தோறும் ஏராளமான தொகை செலவாகி வந்தது. ஆனால் உங்களின் மலிவுவிலை மருந்து திட்டத்தின் மூலம் மாதந்தோறும் எனக்கு ரூ.3,500 வரை சேமிக்க முடிகிறது என கூறினார்.

மேலும் அவர், நான் கடவுளை பார்த்தது இல்லை. ஆனால் உங்களில் நான் கடவுளை பார்க்கிறேன் என்று உருக்கமாக கூறினார்.

இதைக் கேட்ட பிரதமர் மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவரால் பேச முடியவில்லை. சில நிமிடங்கள் மவுனமாக நின்ற அவர் பின்னர் பேசினார். முடக்கு வாதம் காரணமாக நிற்பதற்கு சிரமப்பட்ட அந்த பெண்ணை முதலில் அமர்ந்து பேசுமாறு கூறினார்.

பின்னர் அவர் கூறுகையில், உங்கள் தன்னம்பிக்கையால் நீங்கள் நோயை வென்றிருக்கிறீர்கள். உங்கள் தைரியம்தான் உங்கள் கடவுள். அதே தைரியம்தான் இதுபோன்ற மிகப்பெரும் நெருக்கடியில் இருந்து நீங்கள் மீண்டுவர உங்களுக்கு வலிமை அளித்திருக்கிறது. இந்த நம்பிக்கையை நீங்கள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com