காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தனி இணையதளம் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

குரியா ஸ்வயம் சேவி சன்ஸ்தன் என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், காணாமல் போன மற்றும் கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பற்றியும், மத்திய அரசின் கண்காணிப்பில் செயல்படும் ‘கோயா’ இணையதளத்தில் உள்ள தகவல்கள் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியிருந்தது.

இடைத்தரகர்கள் மூலம் கடத்தப்பட்ட சிறுவர், சிறுமிகள் ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது பற்றி உத்தரபிரதேசத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. இந்த பிரச்சினையில் அவர்களிடையே ஒருங்கிணைப்பு நிலவுவது அவசியம். மேலும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவும், விசாரணை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தனி இணையதளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இணையதளத்தை நிர்வகிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் காணாமல் போன குழந்தைகள் பற்றிய புகார்களை விசாரிப்பவராக இருக்கலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசிடம் இருந்து இதுகுறித்து அறிவுறுத்தல்களை பெறுமாறு மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

1 More update

Next Story