மத்திய அரசில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கியது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; கேரள அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

மத்திய அரசில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கியது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என கேரள அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கியது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; கேரள அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
Published on

திரும்பப்பெற வேண்டும்

மத்திய மந்திரிசபை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சகம் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு இது கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கி இருக்கும் இந்த நடவடிக்கைக்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த முடிவை திரும்பப்பெறுமாறு அங்குள்ள கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில அரசை சார்ந்தது

இது குறித்து மாநில கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை மந்திரி வி.என்.வாசவன் கூறுகையில், ஒரு புதிய கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்குவது என்பது மாநில அரசுகளின் கூட்டாட்சி உரிமைகளை மீறுவதாகும். அரசியல் சாசனத்தின் 7-வது அட்டணைப்படி கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசை சார்ந்தவை ஆகும். எனவே மத்திய அரசின் நடவடிக்கை மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவது மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும் என்று தெரிவித்தார்.கூட்டுறவுத்துறை மாநில அரசை சார்ந்தது என்பதால், மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சட்ட நடவடிக்கை

இதைப்போல காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறும்போது, நாட்டின் கூட்டாட்சி முறையை அழிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு முயற்சிதான் இது. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியாகும். இது முற்றிலும் தீவிரத்துடன் கருதப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.இது ஒரு அரசியல் சதி எனவும், எனவே இதில் மாநில அரசும், முதல்-மந்திரியும் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட ரமேஷ் சென்னிதலா, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் கூறினார்.

மற்றொரு தாக்குதல்

மாநிலத்தின் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த இடதுசாரி தலைவர்களில் ஒருவருமான டி.எம்.தோமஸ் தனது டுவிட்டர் தளத்தில், நாட்டின் கூட்டாட்சி தத்துவம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் இது. கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசின் பட்டியலில் உள்ளவை ஆகும். முழு கூட்டுறவுத் துறையையும் கையகப்படுத்தவும், இந்துத்துவாவை ஊக்குவிக்கவும் புதிய கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் மந்திரியான அமித்ஷாவை விட சிறந்தவர் யாரும் இல்லை என சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com