

புதுடெல்லி,
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி, பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 84 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
வழக்கத்துக்கு மாறாக, சாமானியர்கள் மற்றும் பிரபலம் அல்லாதவர்களும் விருது பட்டியலில் இடம் பிடித்தனர். இவர்களில், முதல்கட்டமாக 42 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா, 20-ம் தேதி ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இளையராஜா, பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் உள்பட 42 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். மீதி 42 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஸ்நூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.