

மைசூரு,
தசரா விழாவை முன்னிட்டு மைசூரு நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 கி.மீ. தூரத்திற்கு மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வந்தார்.
அவர், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டு மக்களுக்கு தசரா, விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாட்டில் நல்ல மழை பெய்து, விளைச்சல் அதிகரித்து கொரோனா தொற்று அழிந்து அனைவரும் சுகமாக வாழ சாமுண்டீஸ்வரி அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். மின்விளக்கு அலங்காரத்தால் மைசூரு கோலாகலமாக உள்ளது.
மின்விளக்கு அலங்காரத்தை கண்டு ரசிக்க வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மின்விளக்கு அலங்காரத்தை கூடுதல் நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை ஏற்று இன்னும் 9 நாட்களுக்கு மின்விளக்கு அலங்காரத்தை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.