

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பணி நியமனம்
ஆசிரியர்கள் பணி நியமனம், நிதி நிலை நிர்வாகம் ஆகியவற்றை நிர்வகிக்க அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிகர்நிலை அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் குழுவின் அறிக்கை பெறப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே முழு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் அது சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.
நிர்வாக ரீதியாக பல்வேறு சவால்கள் உள்ளன. பணி நியமனத்திற்கு அனுமதி கேட்டால் அதற்கு நிதித்துறை அனுமதி கிடைப்பது இல்லை. அதனால் சில பல்கலைக்கழகங்களில் ஏராளமான பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. அதனால் தான் பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் வழங்கி பணி நியமனம் பணிகளை அங்கேயே மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் நியமனம்
பணி நியமனத்தில் தரம், திறன் இல்லை. 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஆசிரியர்கள் பணி நியமனமே நடக்கிறது என்ற பேச்சு உள்ளது. கற்பித்தல் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இனி ஆண்டுதோறும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இதற்காக ஆசிரியர் தகுதி பட்டியல் ஒன்று தயாராக வைக்கப்படும். ஆசிரியர் தேவை உள்ள பல்கலைக்கழகங்கள், இந்த பட்டியலில் இருந்து ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் உயர்கல்வித்துறையின் நோக்கம் நிறைவேறும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.