

புதுடெல்லி,
பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என எத்தனை தடை உத்தரவை அரசு கொண்டுவந்தாலும் அதனை புகைப்பவர்கள் கேட்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு எதிராக அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
கடந்த மாதம் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் 100 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 21,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக புகையிலை பொருள்களைப் புகைப்பது குறித்தும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான விளம்பரங்களால் குறிப்பாக பள்ளி மாணவர்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்துவதற்கு ஈர்க்கப்படுகின்றனர் என்றும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லி போலீஸ் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். டெல்லி போலீசார் பொது இடங்களில் புகைப்பவர்களை பிடித்து உடனடியாக அபராதம் விதித்து வருகிறார்கள். புகையிலை விளம்பரங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கையை போலீஸ் எடுத்து வருகிறது. புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்றுநோய்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி போலீசின் இந்நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்து உள்ளனர், பொது இடங்களில் புகைப்பவர்கள் நேரிடும் பிரச்சனையை தடுக்கும் விதமாக போலீஸ் நடவடிக்கை இருப்பதாக கூறிஉள்ளனர். போலீஸ் நடவடிக்கையை பாராட்டி டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.