

புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் முக்கியமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை ஆக்கிரமித்து போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு கடந்த ஜனவரி 22-ந் தேதி வரை விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எந்த பயனும் ஏற்படவில்லை.
எனவே எந்தவித பின்னடைவும் இன்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் விவசாயிகள் முகாமிட்டுள்ள திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அதிருப்தி வெளியிட்டது. விவசாயிகளுக்கு போராட உரிமை இருந்தாலும், பல மாதங்களாக போக்குவரத்தை தடுக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றினர். அதேநேரம் போராட்டக்களங்களில் கடும் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு வீரியமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் வருகிற 26-ந் தேதியுடன், ஓராண்டை எட்டுகிறது. இதையொட்டி தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தலைவரான ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில், மத்திய அரசுக்கு நவம்பர் 26-ந் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதன்பிறகு போராட்டத்தை பலப்படுத்தும் வகையில் டெல்லியை முற்றுகையிடுவதற்காக 27-ந் தேதி முதல் விவசாயிகள் தங்கள் கிராமங்களில் இருந்து டிராக்டர்களில் டெல்லியை சுற்றிலும் திரளுவார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றால் நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து தானிய மண்டிகளாக மாற்றுவோம் என அவர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.