நாடாளுமன்றத்தில் டெல்லி கலவர பிரச்சினையை எழுப்பி போர்க்கோலம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லி கலவர பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் டெல்லி கலவர பிரச்சினையை எழுப்பி போர்க்கோலம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், 3 வார இடைவெளிக்கு பிறகு, நேற்று மீண்டும் தொடங்கியது.

மக்களவை நேற்று கூடியவுடன், கடந்த 28-ந் தேதி மறைந்த ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. பைத்யநாத் மகதோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை கூடியவுடன், காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எம்.பி.க்கள் டெல்லி கலவர பிரச்சினையை கிளப்பி போர்க்கோலம் பூண்டனர். அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகக்கோரி கூச்சலிட்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் கையில் பிடித்திருந்தனர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். அவர்களின் செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கவுரவ் கோகாய், ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் கருப்பு பதாகைகளை ஏந்தியபடி ஆளும் கட்சி உறுப்பினர்களின் இருக்கை பகுதிக்கு சென்றபோது நிலைமை மோசமடைந்தது.

அவர்கள் நேரடி வரிகள் மசோதா மீது பேசிக்கொண்டிருந்த பா.ஜனதா கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால் முகத்துக்கு எதிரே பதாகையை காட்டினர். அப்போது, ரமேஷ் பிதுரி, நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பா.ஜனதா உறுப்பினர் கள், சஞ்சய் ஜெய்ஸ்வாலை மீட்க ஓடி வந்தனர்.

சில காங்கிரஸ் உறுப்பினர்கள், காகிதங்களை கிழித்து மேலே வீசினர். அமித்ஷாவுக்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். அப்போது, பின்வரிசையில் இருந்த பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் காங்கிரஸ் எம்.பி.க்களை நோக்கி ஓடி வந்தனர். அதையடுத்து, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரையொருவர் முன்னும், பின்னும் தள்ளினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது.

மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி ஆகியோர் இருதரப்பினரையும் அமைதிப்படுத்த முயன்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அப்போது சபையில் இருந்தனர்.

இந்த அமளிக்கிடையே, சபை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 3 மணிக்கு சபை கூடியபோது, பா.ஜனதா உறுப்பினர்கள், சபையின் மையப்பகுதியில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் வழியை அடைத்தனர்.

பா.ஜனதா பெண் எம்.பி. ஜஸ்கார் மீனா தன்னை சபைக்குள் வைத்து தாக்கியதாக காங்கிரஸ் பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் புகார் தெரிவித்தார்.

தான் பட்டியல் இனத்தவர் என்பதாலும், பெண் என்பதாலும்தான் இதுபோன்று திரும்ப திரும்ப நடக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருக்கு ஆதரவாக பலர் கோஷமிட்டனர். அதையடுத்து, சபை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கும் அமளி தொடர்ந்ததால், 4.30 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர்கள், அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரும் பதாகையை சபாநாயகர் மேஜை மீது வைத்தனர். அது உடனடியாக அகற்றப்பட்டது. 4.30 மணிக்கு சபை கூடியபோது, உறுப்பினர்களின் அமளி குறித்து வேதனை தெரிவித்த சபாநாயகர், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

நேற்றைய கூட்டத்தில், நேரடி வரிகள் மசோதா, கனிமங்கள் மசோதா உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, சபைக்குள் பா.ஜனதா பெண் எம்.பி.க்களிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கேட்டுக்கொள்வேன் என்றும் கூறினார்.

இதேபோல் நாடாளுமன்ற மாநிலங்களவையில், டெல்லி கலவரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். விதி எண் 267-ன் கீழ், சபை நடவடிக்கைகளை ரத்து செய்து, டெல்லி கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால், சபையில் இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதிக்கவில்லை.

இயல்புநிலை திரும்புவதற்குத்தான் முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்பிறகு, இதுபோன்ற கலவரம் நடக்காமல் தடுப்பதற் கான வழிமுறைகளை விவாதிப்போம். சம்பந்தப்பட்ட மந்திரி, அவை முன்னவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி விட்டு, விவாதத்துக்கு நேரம் ஒதுக்குகிறேன் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை ஏற்காமல், அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு கூடியபோது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க் கள், டெல்லி கலவரத்தின்போது மத்திய அரசு தூங்கிக்கொண்டிருந்ததாக கூச்சலிட்டனர். அவர்களை இருக்கைக்கு திரும்புமாறு சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக்கொண்டார்.

கண்களில் கருப்புத்துணி கட்டி இருந்த 3 எம்.பி.க்களிடம் அதை அகற்றுமாறு அவர் வற்புறுத்தினார். அமளிக்கிடையே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், 3 நிகர்நிலை சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, எதிர்க்கட்சிகளின் கூச்சல் அதிகரித்ததால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com