

சண்டிகர்,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால், பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்தன. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியுடன் நேரடியாக இணைக்கும் அமிர்தசரஸ்-ரோம் இடையிலான நேரடி விமான சேவை நேற்று(செப்டம்பர் 8) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் லண்டன் மற்றும் பிர்மிங்காம் ஆகிய நகரங்களுக்கு இடையே ஏர் இந்தியா விமான சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரோம் நகரத்துடனான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் இந்திய நேரப்படி புதன்கிழமை மதியம் 3.55 மணிக்கு அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு ரோம் நகரத்தை சென்றடையும். அதே போல ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு ரோம் நகரத்தில் இருந்து புறப்படும் விமானம் வெள்ளிக்கிழமை காலை 5.35 மணிக்கு அமிர்தசரஸ் நகரத்தை வந்தடையும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.