கட்சி தலைமையை மாற்றக்கோரி புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் ரகளை

கட்சி தலைமையை மாற்றக்கோரி புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டு மேலிட பார்வையாளரின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சி தலைமையை மாற்றக்கோரி புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் ரகளை
Published on

காங்கிரஸ் கோஷ்டி பூசல்

புதுவை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

கட்சி கூட்டம், பொது போராட்டங்களிலும் இது எதிரொலித்து வருகிறது. இந்தநிலையில் நாராயணசாமி, ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோருக்கு எதிராக சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் 42 பேர் கடிதம் அனுப்பினர்.

தொடர்ந்து பெங்களூருவில் புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவை சந்தித்து இதுகுறித்து அதிருப்தி அணியினர் முறையிட்டனர். ஆனால் இதுகுறித்து கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்காத நிலை இருந்து வருகிறது.

அரசியல் விவகார குழு கூட்டம்

இந்தநிலையில் நேற்று காலை புதுவை வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அரசியல் விவகார குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ள மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவரை வழிமறித்த அதிருப்தியாளர்கள் தங்களிடம் பேசிவிட்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதற்கு அவர், கூட்டத்துக்குப்பின் மீண்டும் வந்து பேசுவதாக கூறினார்.

அதையடுத்து அரசியல் விவகார குழு கூட்டம் நடந்தது. இதில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் நாராயணசாமி யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

காரை முற்றுகையிட்டு கோஷம்

அதன்பின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரின் காரை முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மழுப்பலாக பதில் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிருப்தியாளர்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து எதிர்கோஷ்டியினர் தங்களது ஆதரவாளர்களுடன் அங்கு திரண்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவின் காரை, அதிருப்தியாளர்கள் சூழ்ந்து நின்று வழியை மறித்தனர்.

கார் கண்ணாடி உடைப்பு

அப்போது காங்கிரஸ் மேலிட பார்வையாளர் காரின் பின்பக்க கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களை நடுரோட்டில் போட்டு வழியை மறித்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அதிருப்தியாளர்களை சமாதானம் செய்தனர். இதன்பின் அங்கிருந்து தினேஷ் குண்டுராவ் காரில் விமான நிலையத்துக்கு சென்றார்.

5 நிர்வாகிகள் நீக்கம்

இதற்கிடையே ரகளையில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 நிர்வாகிகளை மாநிலத்தலைவர் நீக்கியுள்ளார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ரகளையால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com