

புதுடெல்லி,
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக புரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
அதாவது இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த 2 ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தெரிகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு சொந்தமான 12 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள மிசா பார்தியின் பண்ணை வீடு உட்பட அவருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.