80 சதவீதம் வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டனர் - தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்

80 சதவீதம் வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ நடைமுறைக்கு மாறிவிட்டனர் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
80 சதவீதம் வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டனர் - தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்
Published on

புதுடெல்லி,

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 570, தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை பராமரித்து வருகிறது. அங்கு பாஸ்டேக் முறை கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டதால் படிப்படியாக அரசு காலஅவகாசம் வழங்கிவந்தது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட 80 சதவீதம் வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டனர். மீதமுள்ள 20 சதவீத வாகனங்கள் மட்டும் இந்த முறைக்கு மாறவில்லை.

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ள நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது அங்கீகரிக்கப்பட்ட வாகனத்துக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்கி உள்ளோம்.

சுங்கச்சாவடிகளை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த கார்களுக்கு மாதம் ரூ.275 செலுத்தி மாதாந்திர சலுகை அட்டை பெற்றுக்கொண்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். அதேபோல் சுங்கச்சாவடி இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த வணிக வாகனங்களுக்கும் பாதி கட்டண சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, வாகனத்தின் பதிவு சான்றிதழ்களின் நகல்களை அளிக்க வேண்டும். பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க விரும்பாதவர்கள் இருமடங்கு கட்டணத்தை செலுத்தியும் செல்ல முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com