மக்களவை தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
மக்களவை தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி,

543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும். எனவே தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

இன்னொரு பக்கம் தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு எடுத்து, தொகுதி பங்கீட்டிலும், தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் மும்முரமாக உள்ளன. மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படலாம் என ஒரு தகவலும், 10 -கட்டங்களாக நடத்தப்படலாம் என மற்றொரு தகவலும் கூறுகின்றன.

ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் இன்று அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த கால வரலாறு

கடந்த காலத்தை பொறுத்தமட்டில், 1999-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு, மே மாதம் 4-ந் தேதியும் (2 கட்ட தேர்தல்), 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந் தேதியும் (4 கட்ட தேர்தல்), 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதியும் (5 கட்ட தேர்தல்) வெளியாகி உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி வெளியிட்டது. அந்த தேர்தல், 9 கட்டங்களாக நடைபெற்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல், கடந்த முறை ஏப்ரல் 24-ந் தேதி நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com