

புதுடெல்லி,
காவிரி பிரச்சினையில் போதுமான அளவுக்கு 20 வருடங்கள் குழப்பங்களை ஏற்படுத்தியாகிவிட்டது, இனி 4 வாரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
காவிரி நீரை பங்கீடு செய்வதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
இதையடுத்து 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்த இறுதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதற்கிடையே, இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் வழக்கம்போல் கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு செவி சாய்க்கவில்லை. அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் 20-ம் தேதி காவிரி வழக்கு இறுதி விசாரணை தொடர்பான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. இப்போது காவிரி பிரச்சினையில் போதுமான அளவுக்கு 20 வருடங்கள் குழப்பங்களை ஏற்படுத்தியாகிவிட்டது, இனி 4 வாரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மற்றும் சந்திராசூட் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
கிரண் குமார் மஜூம்தார் ஷா என்ற சமூக ஆர்வலர் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதில் சுப்ரீம் கோர்ட்டு தலையீடு கோரி 2016-ம் ஆண்டு மனு செய்தார். குடிநீருக்கான உரிமை, வாழ்வாதாரத்துக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.