டைம் இதழின் மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பெற்ற பட்டேலின் ஒற்றுமையின் சிலை- பிரதமர் மகிழ்ச்சி

டைம் இதழ் வெளியிட்டு உள்ள 100 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் பட்டேலின் ஒற்றுமையின் சிலை இடம் பெற்று உள்ளது இதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
டைம் இதழின் மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பெற்ற பட்டேலின் ஒற்றுமையின் சிலை- பிரதமர் மகிழ்ச்சி
Published on

புதுடெல்லி

டைம்ஸ் இதழ் வெளியிட்டு உள்ள உலகின் 2019 சிறந்த இடங்கள் 100 பட்டியலில் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமையின் சிலையும் இடம் பெற்று உள்ளது. இதனை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

ஒரு சிறந்த செய்தி ஒற்றுமையின் சிலை டைம்சின் சிறந்த இடங்கள் 2019 பட்டியலில் இடம் பெற்று உள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் உயரம் கொண்ட சிலையை சில நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் 34,000 பேர் பார்வையிட்டனர். இது ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக வளர்ந்து வருவதில் மகிழ்ச்சி என தெரிவித்து உள்ளார்.

மும்பையின் சோஹோ ஹவுஸ் இந்தியாவில் விரும்பப்படும் இடங்களில் டைம் இதழ் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இடம் ஆகும்

உலகின் மிக உயரமானதாகக் கருதப்படும் சர்தார் படேலின் ஒற்றுமையின் சிலை பிரதமரால் பட்டேலின் பிறந்த நாள் விழாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு பிரமாண்ட விழாவில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சிலை நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது, அருகிலுள்ள நகரம் வதோதரா சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், அகமதாபாத் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவிலும் உள்ளது. இந்த சிலையை மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ராம் வி சுதார் வடிவமைத்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ஒற்றுமை சிலை என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது. இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சிலை 290 கி.மீ வேகத்தில் காற்று வீசினாலும் 6.5 ரிக்டர் வரை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com