

கொழும்பு,
இலங்கையில் வடக்கு மாகாணத்தின் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்து வருபவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். தமிழரான இவர் கடந்த 22ந் தேதி யாழ்ப்பாணம் நகருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது நல்லூர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நீதிபதியின் பாதுகாப்பாக்காக சென்றிருந்த போலீஸ்காரின் துப்பாக்கியை பறித்து, நீதிபதியை சுட்டுத்தள்ள முயன்றார். இந்த துப்பாக்கி சூட்டின்போது நீதிபதியின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் குண்டு பாய்ந்து பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவும், நீதிபதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கவும் அதிபர் சிறிசேனா போலீஸ் துறைக்கு உத்தரவிட்டார். தமிழ் நீதிபதியை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் ஏற்கனவே 2 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நான்தான் தமிழ் நீதிபதியை சுட்டுக்கொல்ல முயற்சித்தேன் என கூறி செல்வராஜா ஜெயன்தன் (வயது 39) என்பவர் போலீசில் சரணடைந்தார். அவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் வீரர் என தெரிகிறது. அவர் 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.