

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் அமைத்துள்ள போராட்டக்களத்தை சுற்றி போலீசார் இரும்பு வேலிகள், முள் வேலிகள் கொண்டு அடைத்துள்ளனர். மேலும் சாலைகளில் இரும்பு கம்பிகளையும் பதித்து போராட்டக்காரர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.
ஆனால் அந்த கோட்டைக்குள்ளேயும் விவசாயிகள் சிலர் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். இதற்காக அருகில் உள்ள நர்சரிகளில் இருந்து செடிகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி வந்து நட்டு வளர்த்து வருகின்றனர். காஜிப்பூர் எல்லையில் கரும்பு உள்பட பல்வேறு பயிர்களை நட்டுள்ளனர். சிலர் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். வேறு சிலரோ ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்ச்செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இதைப்போல சிங்கு எல்லையிலும் விவசாயிகள் மலர் தோட்டம் அமைத்து இருக்கிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், அரசு எங்களை சுற்றி வலிமையான இரும்பு வேலி அமைக்கிறது. ஆனால் நாங்களோ மலர்ச்செடிகளை வளர்க்கிறோம். இதுதான் எங்கள் செய்தி. எங்கள் மீதான அடக்குமுறையை நாங்கள் அன்பினால் எதிர்கொள்வோம் என்று தெரிவித்தனர்.