ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ வாய்ப்பு: ராணுவ தளபதி நரவனே

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டவுடன், அங்கிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ முயற்சிப்பார்கள் என்று ராணுவ தளபதி நரவனே கூறினார்.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ வாய்ப்பு: ராணுவ தளபதி நரவனே
Published on

கிழக்கு லடாக் நிலைமை

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பல இடங்களில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 17 மாத காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. இரு தரப்பும் மோதல் பகுதிகளில் இருந்த படைகளை விலக்கினாலும், பேச்சு வார்த்தை நடத்தி வந்தாலும், ஒரு நீடித்த அமைதியற்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது.இந்த நிலையில், டெல்லியில் ஆங்கில பத்திரிகை நடத்திய மாநாடு ஒன்றில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கலந்து கொண்டு கிழக்கு லடாக் விவகாரத்தை தொட்டுப்பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்பை (படை குவிப்பை) செய்திருப்பது, தொடர்வது கவலை அளிக்கும் அம்சம்தான். சீனத் தரப்பில் சம அளவில் உள்கட்டமைப்பு மேம்பாடும் உள்ளது. எனவே சீனப்படையினர் அங்கு தங்கி இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நாங்கள் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் அங்கு தங்குவதாக இருந்தால், நாமும் அங்கு தங்க வேண்டியதிருக்கிறது.சீனத்தரப்பு செய்ததைப் போலவே இந்தியப் பகுதியிலும் படைகளை குவிப்பது மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்வது நல்லதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுதப்படைகளின் விரைவான செயல்பாடு

பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் ராணுவ தளபதி நரவனே பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகமே கொரோனா வைரஸ் தொற்று பரவலில் தத்தளித்தபோது, சீனா தனது கிழக்கு கடற்பரப்பில் சிக்கல்களை கொண்டிருந்தபோது, எதற்காக கிழக்கு லடாக்கில் சீனா மோதலைத்தூண்டியது என்பதைப் புரிந்து கொள்வது கடினம் ஆகும். ஆனால் எதுவாக இருந்தாலும், இந்திய ஆயுதப்படைகள் விரைவாக செயல்படுவதால் அவர்களால் விரைவாக எதையும் சாதிக்க முடியவில்லை.

கிழக்கு லடாக்கின் ஒட்டுமொத்த நிலைமை பற்றி கேட்கிறீர்கள். இதற்கு நான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளரின் சமீபத்திய அறிக்கையை குறிப்பிட வேண்டும். அவர் வடக்கு எல்லையில் என்ன நடந்தாலும் அது மிகப்பெரிய கட்டமைப்பால்தான் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

கிழக்கு லடாக்கில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாம் உளவுத்துறை, கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம்.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி

காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என கேட்கிறீர்கள். தொடர்பு இருக்கிறது என்று சொல்லி விட முடியாது.ஆனால் காஷ்மீரில் நிச்சயமாக இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஆனால் கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினை, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியில் இருந்தபோது, காஷ்மீரில் ஆப்கானிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் இருந்தார்கள் என்பதுதான். எனவே அது மறுபடியும் நடக்கும் என்பதை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்படுகிறபோது, அங்கிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீர் வருவதை நாம் பார்க்க முடியும். அதே நேரத்தில் அந்த முயற்சிகளை முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு ஊடுருவல் தடுப்பு அமைப்புகள் நம்மிடம் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com