

புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இருந்து வந்தது.
டெல்லி மற்றும் பஞ்சாப், உத்தரகாண்ட், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, கொலம்பியா, மலேசியா, நைஜீரியா என சர்வதேச அளவில் பல நாடுகளுடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்கள்.
இது குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சர்வதேச அளவில் வேட்டை நடத்தினர். இதில் மொத்தம் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கைப்பற்றி உள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 20 கிலோ கொகைன் பிடித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி போதைப்பொருட்கள் சிக்கி உள்ளன.
ஆஸ்திரேலியாவில் ரூ.200 கோடி போதைப்பொருள்
ஆஸ்திரேலியாவில் இருந்து 55 கிலோ கொகைன், 200 கிலோ மெத்தம்பெடமைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.200 கோடி ஆகும்.
இந்த கடத்தல்களில் தொடர்புடைய 9 பேரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
எஞ்சியவர்களில் அமெரிக்கர் ஒருவர், இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர், நைஜீரிய நாட்டினர் 2 பேர் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.