பீகார் காப்பகத்தில் பயங்கரம்; சிறுமிகள் பலாத்காரம், ஒருவர் அடித்துக்கொன்று புதைப்பு; சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

பீகாரில் அரசு காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் காப்பகத்தில் பயங்கரம்; சிறுமிகள் பலாத்காரம், ஒருவர் அடித்துக்கொன்று புதைப்பு; சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்
Published on

பாட்னா,

முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்டு வரும் காப்பகத்தில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வருகிறார்கள். காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காப்பகத்தில் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்த போது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுக்கு நடந்த கொடுமையை விளக்கியுள்ளார்கள். காப்பகத்தில் தங்கியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பல நேரங்களில் பலாத்காரம் செய்துள்ளனர், சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கொன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏதும் கிடைக்கவில்லை.

இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுவரும் போலீஸ், காப்பக்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளது. இதற்கிடையே காப்பகத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர், முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முஷாப்பர்நகரில் காப்பகம் மூடப்பட்டு பிற மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு சிறுமிகள் மாற்றப்பட்டுள்ளனர். விசாரணை தொடரும் நிலையில் போலீஸ் கண்காணிப்பாளர், ஹர்பிரீத் கவுர் பேசுகையில், இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் கூறிய தகவலின்படி குறிப்பிட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்தோம் ஆனால், அந்த இடத்தில் எந்தவிதமான உடலும் கிடைக்கவில்லை. ஆனால், அந்த இடம் மட்டுமல்லாமல் தொடர்ந்து பல இடங்களில் தோண்டி ஆய்வு செய்ய இருக்கிறோம்.

இங்கிருக்கும் 40 சிறுமிகளிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியதில், பாதிக்கு மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சிறுமிகள் பலாத்கார விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்தக் காப்பகத்தை நடத்தியவர் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருங்கியவர். அவரைப் பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com