

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கூர்கா இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் டார்ஜிலிங் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஜூன் மாதம் இந்த போராட்டம் துவங்கியது.
போராட்டக்குழு தலைவர் பிமல்குருங் தலைமையில் 100 நாட்களையும் தாண்டி பந்த், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்கள் டார்ஜிலிங்கில் நடந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேற்கு வங்க அரசு கூர்கா இனத்தவர்கள் வசிக்கும் டார்ஜிலிங் பகுதி யிலும் வங்காள மொழி அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது. எனவே தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.
கூர்கா லேண்ட் போராட்ட குழு தலைவர் பிமல் குருங், நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவும் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழு தலைவர் பிமல்குருங் அறிவித்தார். 104 நாட்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக இன்று காலையில் டார்ஜிலிங்கில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.