கோவாவில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு.. கல்வீச்சில் காயமடைந்த மந்திரி

சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக மந்திரி புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.
கோவாவில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு.. கல்வீச்சில் காயமடைந்த மந்திரி
Published on

பனாஜி:

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கோவா மாநிலம் மார்கோ நகர் அருகே உள்ள சாவ் ஜோஸ் டி ஏரியல் என்ற கிராமத்தில் சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டது. மாநில சமூக நலத்துறை மந்திரி சுபாஷ் பால் தேசாய் சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காரில் ஏறியபோது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சில கற்கள் மந்திரி சுபாஷ் பால் தேசாயின் மீதும் விழுந்தன. இதில் அவர் காயமடைந்தார்.

சிவாஜி சிலை நிறுவுவதற்கு அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி சிலை வைக்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி மந்திரி தேசாய் கூறுகையில், "சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டபோது கற்கள் வீசப்பட்டன, சில கற்கள் என் மீது விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது. எனினும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. நேற்று ஆய்வு செய்தபோது சிவாஜி சிலைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில அரசியல்வாதிகள் உள்ளூர் மக்களை தூண்டிவிட்டிருக்கிறார்கள்" என்றார்.

சிவாஜி சிலையானது, பொது இடத்தில் நிறுவப்படவில்லை. அந்த ஊரில் உள்ள ஒரு இஸ்லாமியர் தானமாக வழங்கிய இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. நேற்று முதலே எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர். இதனால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com