கொரோனா பாதிப்பு: தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் அதிகரிப்பு -இந்திய ரிசர்வ் வங்கி கவலை

கொரோனா பாதிப்பால் தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு: தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் அதிகரிப்பு -இந்திய ரிசர்வ் வங்கி கவலை
Published on

புதுடெல்லி

மனித வரலாற்றில் பணம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பல நாகரிகங்களில் தங்கம் ஒரு மதிப்பு மிகுந்த உலோகமாக கருதப்பட்டுள்ளது. கரன்சி நோட்டுகளை போல் அல்லாமல், தங்கம் உலகெங்கும் ஏற்கப்படுகிறது.

தங்கம் இல்லாமல் திருமணங்கள் நடைபெறுவதில்லை. முக்கியமாக தென் இந்தியாவில், தங்க மோகம் மிக அதிகம்.

செல்வ செழிப்பு அதிகரித்து வருவதால், தங்கத்திற்கு இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது. நாட்டின் கலாசாரத்தில் தங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சேமிப்புகளை பாதுகாக்கவும், செல்வ செழிப்பு மற்றும் அந்தஸ்தின் சின்னமாகவும், பல முக்கிய சடங்குகளின் அடிப்படை அம்சமாகவும் திகழ்கிறது. தங்கத்தை எளிதில் எடுத்து செல்ல முடிவதாலும், பாதுகாப்பான முதலீடாக இருப்பதாலும் கிராமப்புற மக்களிடம் தங்க மோகம் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு சிறு நகரத்திலும், பல நகை கடைகள் இருப்பதை காண முடியும். சிறு மற்றும் குடும்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள நகை வியாபார துறையில், சமீப காலங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்கள் வசம் உள்ளன. அமெரிக்க அரசு, உலக வங்கி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் மொத்த தங்க இருப்பை விட இது அதிகம். இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில், தென் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருப்பதாக தங்கம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் அமைப்பு கணிக்கிறது.

ஆப்படி பட்ட இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மக்கள் அன்றாடா செலவுகள் மற்றும், மருத்துவ சிகிச்சைக்காக தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்'

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, மூன்றாவது அலைக்கு அரசுகள் தயாராகி வரும் நிலையில், கொரோனா பேரிடரால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசுகள் வழங்கும் ரேசன் பொருட்களும் தேவையை நிறைவேற்றக் கூடிய அளவில் இல்லை. இதனால் குடும்பச் செலவுகளுக்கே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக தங்க நகைக்கடன் , வாகனக் கடன், வீட்டுக்கடன், தனி நபர் கடன், வேளாண் கடன் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

தங்க நகைக்கடன் என்பது 34.9 சதவீதத்தில் இருந்து 81.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனி நபர் கடனும் 10.8 சதவீதத்தில் இருந்து 16.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, தனி நபர் கடனானது 27 லட்சத்து 86 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டுக்கடன் வாங்குவதும் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்க நகைக்கு மட்டுமே ரூ.62,221 கோடி கடன் தரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், கல்விக் கடன் பெறுவது குறைந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.62,720 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.63,805 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், கிரிடிட் கார்டு மூலம் கடன் பெறுவது, வங்கி முதலீட்டுப் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன்பெறுவது போன்றவையும் அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதிலும், முதலீட்டுப் பத்திரங்கள் மூலமாக ரூ. 65,891 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com