

கோரக்பூர்,
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் மூளை அழற்சி உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தினால்தான் குழந்தைகள் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகமும், அரசும் கூறியது.
இந்த மருத்துவமனையில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு முதல் 28-ந்தேதி நள்ளிரவு வரையிலான 48 மணி நேரத்தில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் 7 குழந்தைகள் மூளை அழற்சியினால் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள குழந்தைகள் அனைத்தும் பல்வேறு நோய்களால் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோரக்பூர் மருத்துவமனையில் இந்த மாதம் மட்டும் 290 குழந்தைகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 213 குழந்தைகள் புதிதாக பிறந்தவை எனவும், 77 குழந்தைகள் மூளை அழற்சி நோய்ப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தவை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,250 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாகவும், குறைபிரசவம், மூளை அழற்சி, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள் போன்றவையே இதற்கு காரணம் எனவும் மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே.சிங் கூறியுள்ளார்.