12-ந்தேதி முதல் மைதா, ரவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு - விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா, ரவை போன்றவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

புதுடெல்லி,

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் உக்ரைன் போர் போன்ற சர்வதேச சிக்கல்களாலும் கோதுமை வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்தது. இது சர்வதேச அளவில் சலசலப்புகளையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கோதுமை மாவு, ரவை, மைதா போன்ற கோதுமை சார்ந்த பொருட்களுக்கும் மத்திய அரசு தற்போது கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் இனிமேல் கோதுமை ஏற்றுமதிக்கு அமைச்சக குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். இது வருகிற 12-ந்தேதி முதல் அமலாகிறது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 'கோதுமை மாவின் ஏற்றுமதி கொள்கை இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் கோதுமை ஏற்றுமதி தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவின் பரிந்துரைக்கு உட்பட்டது' என்று குறிப்பிட்டு இருந்தது.

அதன்படி கோதுமை மாவு, மைதா, ரவை உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருட்களுக்கு மேற்படி குழுவின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கோதுமை மாவின் தரம் தொடர்பாக தேவையான வழிமுறைகள் தனியாக அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியா 246.57 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,800 கோடி) அளவுக்கு கோதுமை மாவு ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com