மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

ஆலிகல்லு கிராமத்தில் மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கல்வித்துறை அதிகாரி பிறப்பித்தார்.
மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
Published on

கோலார் தங்கவயல்

அரசு பள்ளி

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் அருகே ஆலிகல்லு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாக ஹேமலதா என்பவர் பணியாற்றி வந்தார்.

அந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை ஹேமலதா பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு மாணவி வகுப்பில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவியிடம் தலைமை ஆசிரியை ஹேமலதா கண்டிப்புடன் நடந்து கொண்டார். மேலும் பாடம் தொடர்பாக சில கேள்விகளை மாணவியிடம் கேட்டார்.

மாணவியின் கை முறிந்தது

அப்போது அந்த மாணவி சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த தலைமை ஆசிரியை ஹேமலதா, அந்த மாணவியை பிரம்பால் தாக்கி கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் அந்த மாணவியின் கை முறிந்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த அரசு பள்ளியை முற்றுகையிட்டனர்.

மேலும் தர்ணா போராட்டம் நடத்தி தலைமை ஆசிரியை ஹேமலதாவை பணி இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கல்வித்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

பணியிடை நீக்கம்

அதன்பேரில் கல்வித்துறை அதிகாரி முனிவெங்கடமாச்சாரி அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், கிராம மக்கள் என அனைவரிடமும் விசாரித்தார். விசாரணை அறிக்கையை அவர் நேற்று கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

அதன்பேரில் நேற்று கல்வித்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியை ஹேமலதாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் தலைமை ஆசிரியை ஹேமலதாவை கிராமத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com