குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்

குஜராத் மாநிலம் வதோதராவில் மழை வெள்ளத்தின் போது நகருக்குள் புகுந்த 52 முதலைகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஓடியது. இந்த மழையால் விஸ்வாமித்ரி ஆறு நிரம்பி வழிந்ததால் ஆற்றில் இருந்த முதலைகள் வதோதரா நகர சாலைகளுக்குள் வந்துள்ளன.

இந்த முதலைகளை பிடிப்பதற்கான பணியில் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கரேலிபாக் பகுதியில் 16 அடி நீள முதலை ஒன்றை மீட்டனர். மேலும், 5 அடி முதல் 10 அடி வரை உள்ள முதலைகள் பலவற்றை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர்.

வனத்துறையினரும், வனவிலங்கு ஆர்வலர்களும் இணைந்து இதுவரை 52 முதலைகளை மீட்டு, அவற்றை விஸ்வாமித்ரி ஆற்றில் விட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரி நிதி தாவே கூறுகையில், மழை வெள்ளத்தோடு சேர்ந்து முதலைகள் நகருக்குள் வந்திருக்கின்றன. பிடிக்கப்பட்ட முதலைகள் அனைத்தும் அவற்றின் வாழ்விடமான விஸ்வாமித்ரி ஆற்றில் விடப்பட்டுள்ளன. மேலும் முதலைகள் எங்காவது காணப்பட்டால் அவை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேர உதவி எண் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com