

மும்பை,
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. டெல்லி, மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் 120 மி.மீ. மழை பெய்துள்ளது.
அதன்பின் இரவு நேரத்திலும் விடாமல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீரில் மிதந்தபடி வாகனங்கள் சென்றன.
இந்நிலையில் அங்கு மேலும் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் புறநகரான விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே மும்பையில் சியான், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்சிஎப் காலனி, எல்பிஎஸ் சாலை, வாட்லா பாலம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கனமழை காரணமாக மும்பையில் செம்பூர் மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் வீட்டின் சுற்று சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது.
விக்ரோலியில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் காயம் அடைந்து உள்ளார். செம்பூர் பகுதியில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என பெருநகர மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.