ஹிஜாப் ஆடை குறியீடு என்ற கோணத்தில் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை - கேரள கவர்னர்

ஹிஜாப் ஆடை குறியீடு என்ற கோணத்தில் இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை என கேரள கவர்னர் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் ஆடை குறியீடு என்ற கோணத்தில் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை - கேரள கவர்னர்
Published on

திருவனந்தபுரம்,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் இஸ்லாமிய மத மாணவிகள் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத சட்டத்தில் அவசியமானது இல்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்.

ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மத நம்பிக்கையை பின்பற்றுவதில் எது முக்கியம் என்பதை இஸ்லாமிய மதமே வரையறுத்துள்ளது. ஆகையால், நீதித்துறையின் வேலை சுலபமாகிவிட்டது. இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர்ஆனில் ஹிஜாப் குறித்து 7 முறை தான் கூறப்பட்டுள்ளது. அதுவும், ஹிஜாப் ஆடை குறியீடு என்ற கோணத்தில் குறிப்பிடப்படவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com