ஹிஜாப் விவகாரம்: தேர்வில் பங்கேற்காத மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படாது - கர்நாடக மந்திரி

தேர்வில் பங்கேற்காத மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த தீர்ப்புக்கு பின் உடுப்பி மாவட்டம் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு வருவதை புறக்கணித்துள்ளனர்.

அதேவேளை, கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு வெளியான பின் பள்ளிகளில் இறுதி செய்முறை பயிற்சி தேர்வுகள் நடைபெற்றன. இந்த இறுதி தேர்வுகளில் சில இஸ்லாமிய மாணவிகள் பங்கேற்கவில்லை. இதனால், தேர்வில் பங்கேற்காத மாணவிகளுக்கு 'ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாணவிகள் தேர்வில் தோல்வியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தேர்வில் பங்கேற்காத மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி நாகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை மந்திரி, கோர்ட்டு என்ன உத்தரவிட்டதோ அதை நாங்கள் பின்பற்றுகிறோம். தேர்வில் பங்கேற்கவில்லை (ஆப்சென்ட்) என்பதையே கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஹிஜாப் விவகாரம், உடல்நலக்குறைவு, படிக்காததால் தேர்வு எழுதவில்லை போன்ற காரணங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

இறுதி தேர்வின் போது ஆப்சென்ட் என்றார் ஆப்சென்ட் தான். தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com