அசாம் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக சேர்க்கப்பட்டார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசாம் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணி நியமனம் பெற்றார்.
அசாம் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக சேர்க்கப்பட்டார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்
Published on

திஸ்பூர்,

அசாமில் பிறந்த அசத்தல் தடகள வீராங்கனை, ஹிமா தாஸ். இவருக்கு வயது 21. இவர் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசியன் விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார்.

தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் ஹிமா தாஸ். இந்த நிலையில் ஹிமா தாஸை, டி.எஸ்.பி.யாக நியமனம் செய்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அசாம் காவல்துறை சார்பில் அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமா தாஸ், அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நடைமுறைப்படி எனக்கு டி.எஸ்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டால்தான் எனக்கு எல்லாம் கிடைத்துள்ளது. மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இன்னும் உழைக்க முயற்சிப்பேன்.

விளையாட்டுத் துறையில் அசாம் மாநிலம், நாட்டிலேயே சிறந்த மாநிலம் என சொல்லும் அளவிற்கு எனது உழைப்பும் இருக்கும். தற்போது தடகள விளையாட்டில் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். நான் விளையாட்டுத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின் பணியில் சேர்வேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com