காஷ்மீரில் இருந்து 72 கம்பெனி பாதுகாப்பு படையினர் வாபஸ் - உள்துறை அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 72 கம்பெனி பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
காஷ்மீரில் இருந்து 72 கம்பெனி பாதுகாப்பு படையினர் வாபஸ் - உள்துறை அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் எனவும், லடாக் எனவும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், வதந்திகள் பரவி வன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகளும் முடக்கப்பட்டது. முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் உள்பட மொத்தம் 72 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப். - 24, பி.எஸ்.எப். - 12, ஐ.டி.பி.பி. -12, சி.ஐ.எஸ்.எப். -12 மற்றும் எஸ்.எஸ்.பி. - 12 ) நாடு முழுவதும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அத்தகைய ஒரு கம்பெனி பாதுகாப்பு படையில் சுமார் 100 பணியாளர்கள் உள்ளனர்.

மேலும் படை வீரர்களை வாபஸ் பெறும் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வர உள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com