மக்களவையில் காகிதம் கிழித்து வீச்சு: எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் காகிதத்தை கிழித்து வீசியதற்கு வேதனை தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற பாரம்பரியத்துக்கு ஒவ்வாத செயல்கள் மீண்டும் அரங்கேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மக்களவையில் காகிதம் கிழித்து வீச்சு: எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
Published on

காகிதத்தை கிழித்து வீசினர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. ஆனால் பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மக்களவையில் விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறின. குறிப்பாக காங்கிரசை சேர்ந்த குர்ஜீத் அஜாலா, பிரதாபன், ஹிபி ஈடன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை அலுவல் குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் மற்றும் கோஷங்கள் எழுதி வந்த அட்டைகளை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர்.இதைப்போல ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இருந்த பகுதியை நோக்கியும் அவர்கள் வீசினார்கள். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எனவே அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த போராட்டத்தின்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை. எனவே நேற்று அவர் அவையில் வேதனையை வெளியிட்டார்.அந்தவகையில் காலையில் அவை கூடியதும், முன்தினம் நிகழ்ந்த அமளியை சுட்டிக்காட்டி அவர் பேசினார். அவர் கூறுகையில், அவையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த நிகழ்வுகள் எனக்கு வேதனையை கொடுத்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானவை என்று கூறினார்.நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்படுவதற்கு உறுப்பினர்கள் இணைந்து தீர்வு ஒன்றை காண முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ஓம் பிர்லா, நாடாளுமன்ற பாரம்பரியத்துக்கு ஒவ்வாத செயல்கள் மீண்டும் அரங்கேறக்கூடாது எனவும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மீண்டும் அமளி

அப்போது மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து, எங்கள் கருத்துகளை அவையில் வெளிப்படுத்த அரசு அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். உடனே குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நேற்றைய (நேற்று முன்தினம்) சம்பவத்தை குறித்து மட்டும் பேசுமாறு வலியுறுத்தினார்.இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் பெரும் அமளியும், குழப்பமும் நிலவியது. எனவே அவையை 11.30 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com