டிக்கெட் வாங்குவதில் கூட்ட நெரிசல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு

இந்தியா- ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான டிக்கெட் பெறுவதற்கு ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
டிக்கெட் வாங்குவதில் கூட்ட நெரிசல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on

ஐதராபாத்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் 3-வது டி20 போட்டி வருகிற 25-ந்தேதி ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவதற்கு ஜிம்கானா மைதானத்தில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதில் சுயநினைவை இழந்த பெண் ஒருவருக்கு போலீசார் சிபிஆர் சிகிச்சை செய்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மைதானத்தில் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. இதுவே இந்த நிலைக்கு காரணமாகும்.

அலட்சியமாக செயல்பட்டதற்காக போலீசார், முகமது அசாருதீன் தலைமையிலான ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அசாருதீன் கூறும்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஐதராபாத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது என்றார்.

இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா விளையாட்டுத்துறை மந்திரி ஸ்ரீனிவாஸ் கவுட், அரசு அதிகாரிகள் மற்றும் முகமது அசாருதீன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கவுட், ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தன்னிச்சையாக செயல்படாமல் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாடியிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com