

டேராடூன்,
உத்தரகாண்டில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி, பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல் மந்திரியாக பாரதீய ஜனதா கட்சியைச்சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் உள்ளார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஹேமந்த் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முதல் மந்திரி அலுவலகம் கடந்த 9 மாதங்களில், தேநீர், காஃபி,பிஸ்கட் ஆகியவற்றிற்கு எவ்வளவு செலவிட்டுள்ளது என கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு ரூ. 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 செலவிடப்பட்டுள்ளது என பதிலாக அளித்தது தெரியவந்துள்ளது.
9 மாதங்களில் தேநீர் செலவுக்கு மட்டும் 68 லட்சம் செலவானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விரேந்திர பிஸ்த், கூறுகையில், இது போன்ற செலவுகள் ஏற்படுவது இயற்கையானதுதான், இருப்பினும் அளவுக்கு அதிகமான தொகை செலவு ஏற்பட்டு இருப்பது கவலை அளிக்க கூடியதாக உள்ளது. முதல் மந்திரி அலுவலகத்தில் ஜனதா தர்பார், அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தை முதல் மந்திரி கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்றார்.
இதற்கு முன்னர் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத், கடந்த 2014-16-ம் ஆண்டுகளில் தனது முதல்வர் அலுவலகத்தில் டீ,காபி. சமோசா, பிஸ்கட் ஆகியவற்றிகு ரூ.1.5 கோடி செலவு செய்ததாக தகவல் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்தது