

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி முத்துக் கவசம் அணிந்து ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
முன்னதாக காலை கோவிலின் சம்பங்கி பிரகாரத்துக்கு உற்சவர்களை கொண்டு வந்தனர். அங்கு, காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்கள் முன்னிலையில் கோவிலின் அர்ச்சகர்கள் மற்றும் வேதப் பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக குண்டம் வளர்த்து மகா சாந்தி ஹோமம் நடத்தினர்.
அதைத்தொடர்து ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சத கலச திருமஞ்சனம் நடந்தது. மாலை சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி முத்துக்கவசம் அணிந்து தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.