

புதுடெல்லி,
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டில் வரைவு செயல் திட்டத்துடன் ஆஜராகி இருந்தார். விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டு உத்தரவின் படி வரைவு செயல்திட்டத்தை மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும் என்று கூறினார்.
பிப்ரவரி 16-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தங்கள் கருத்தை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் புதன்கிழமைக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அன்று இந்த வரைவு செயல்திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. மத்திய அரசின் வரைவு திட்டம் குறித்து தமிழகம் கருத்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி காவிரி வழக்கில் இன்றைய விசாரணையில் 3 முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
* மத்திய அரசு உருவாக்கும் அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும்
* அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூரில் இருந்து மாற்ற வேண்டும்
* உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்க உள்ளது.